அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Sunday 19 August 2012

நமது விழா குறித்து தினமணியில் வெளியான செய்தி - 1


அடிமை மனோ நிலையிலிருந்து 
விடுபட வேண்டும்!
'தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்

திருப்பூர், ஆக. 15: நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும்  சுதந்திரம் என்றால் என்ன என்பதை உணர வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்; அதற்கு அடிமை மனோ நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்று திருப்பூரில் நடைபெற்ற சுதந்திர தினத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசினார்.

திருப்பூர் பொதுநல அமைப்புகள் இணைந்து டவுன்ஹாலில் புதன்கிழமை நடத்திய சுதந்திர தினத் திருவிழா நிறைவுப் பேருரையில் அவர் பேசியது: 

தமிழகத்தில் சுதந்திரப் போராட்டத்தின்போது முன்னிலை வகித்த இடங்கள் மூன்று. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முதன்முதலாக வித்திட்ட இடம் வேலூர் கோட்டை. அங்கு சிப்பாய்கள் நடத்திய புரட்சிதான் பிரிட்டிஷ் அரசுக்கு விடப்பட்ட முதல் எச்சரிக்கை மணி. அடுத்ததாக சுதந்திரப் போராட்ட குரல் எழும்பிய இடம் நெல்லை.  வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் சுதந்திரக் கனலை எழுப்பினர். விபின் சந்திர பாலின் கைதைத் தொடர்ந்து நடந்த நெல்லைக் கலவரம் மிகப் பெரிய சரித்திர நிகழ்வு.

மூன்றாவதாக இந்தத் திருப்பூர் மண்ணில்தான் விடுதலை வேள்வியின் மிகப் பெரிய தியாகம் கொடி காத்த குமரனால் அரங்கேற்றப்பட்டது. இன்று செங்கோட்டையிலும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் தேசியக்கொடி  பட்டொளி வீசிப் பறக்கிறது  என்றால் அதற்குக் காரணமான விதை இந்த மண்ணில்தான் விதைக்கப்பட்டது.

நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளுக்குப் பிறகும் உற்சாகமாக ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. எத்தனையோ வாழ்வாதாரப் பிரச்னைகளையும், அரசியல் ஏமாற்றங்களையும், இன்னல்களையும் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் சுதந்திர தின விழாவை மக்கள் கொண்டாடி வருகின்றனர். வெறும் அடையாளமாகக் கொண்டாடப்பட்டாலும் கூட இது அவசியமானது என்பதை நாம் உணர வேண்டும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 84 நாடுகள் சுதந்திரம் பெற்றன. அதில், அரசியல் சட்டத்தை பிரகடனப்படுத்தி, ஜனநாயகத்தை முன்மொழிந்து, அதிலிருந்து தடம் புரளாமல் இருக்கும் நாடு இந்தியா மட்டும்தான். 1947 லிலிருந்து இன்று வரை  தொடர்ந்து நாடாளுமன்ற ஜனநாயக முறையில் நாம் நடைபோட்டுக் கொண்டிருப்பதே ஒரு மிகப்பெரிய சாதனைதான்.

இந்தியாவில் ஊழல் மலிந்திருக்கிறது, நிர்வாகம் சரிவர நடக்கவில்லை. 65 ஆண்டுகளாகியும் ஒருவேளை கஞ்சிக்கு வழியில்லாத மக்கள் தெருவோரங்களில் வசிக்கின்ற நிலை தொடர்கிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. பிறகு எதற்காக நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று கேட்கலாம். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்?  சுதந்திரம் இருந்தால்தானே இந்த நிலைமைகளுக்கு நாம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்? அதனால்தான் அடையாளமாக இருந்தாலும்கூட ஆரவாரமாக சுதந்திர தினத்தைக் கொண்டாடியாக வேண்டும்.

ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய உரைகள் இரண்டு உண்டு. எல்லா பள்ளிகளிலும் இவை பாடமாக வைக்கப்பட வேண்டும். முதலாவது உரை, இந்தியா சுதந்திரம் பெற்ற அந்த நள்ளிரவு வேளையில், அன்றைய பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, நாடாளுமன்றத்தில் ஆற்றிய 'விதியுடனான நமது போராட்டம்' என்று தொடங்கும் உரை. மற்றொன்று, அன்றைய சட்ட அமைச்சராக இருந்த பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்திய அரசியல் சட்டத்தை முன்மொழிந்து அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய நிறைவுரை.

"உலகிலுள்ள எல்லா அரசியல் சட்டங்களையும் அலசி ஆராய்ந்து, அவற்றின் நல்ல அம்சங்களை எல்லாம் தேர்ந்தெடுத்துத் தொகுத்து நாங்கள் இந்த அரசியல் சாசனத்தை சுதந்திர இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறோம். இனிமேல் இந்தியாவை வழிநடத்தப் போவது இதுதான். 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவேளை இந்த அரசியல் சாசனம் எதிர்பார்த்த பலனை அளிக்காவிட்டால், எங்களைக் குறை கூறாதீர்கள். அது இந்த அரசியல் சாசனத்தை செயல்படுத்திய அயோக்கியர்களின் தவறாகத்தான் இருக்க முடியும்!'' என்பதுதான் டாக்டர் அம்பேத்கர் சொன்ன கருத்து.

அதுதான் நடந்திருக்கிறது. அப்படி ஏன் நடந்தது என்று யோசித்துப் பார்த்தால், தவறு ஆட்சியாளர்களிடம் மட்டும் இல்லை, நம்மிடமும் இருக்கிறது. நாம் இன்னும் காலனிய ஜமீன்தாரி அடிமைத்தன மனோபாவத்திலிருந்து விடுபடாமல் இருப்பதும்,  அரசும், ஆட்சியும், நிர்வாகமும் நம்முடையது என்கிற எண்ணம் நம்மில் யாருக்குமே இல்லாமல் இருப்பதும்தான் அதற்குக் காரணம்.

வட்டாட்சியர் அலுவலகமாக இருந்தாலும் சரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகமானாலும் சரி, தலைமைச் செயலகமானாலும் சரி, பிரதமர் அலுவலகமே ஆனாலும் சரி, அது சராசரி இந்தியக் குடிமகனுக்கு சேவை புரிவதற்காகத்தான் என்பதை நாம் உணரவில்லையே? அந்த உரிமையைத் துணிந்து கேட்டுப் பெறத் தயாராக இல்லையே. தவறுகளைத் தட்டிக் கேட்கும் மனோபாவம் நம்மிடையே இல்லையே? அதுதான் சுதந்திரம் முறையாகச் செயல்படாமல் இருப்பதற்குக் காரணம்.

பிரிட்டிஷார் ஆட்சியில், அந்நியர்களின் காலனியாக இந்தியா இருந்தபோது, அதை எதிர்த்துப் போராடப் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்தார்கள். ஆனால், ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை உள்ள சுதந்திர இந்தியாவில் தவறுகளைத் தட்டிக் கேட்க யாருக்கும் தைரியம் இல்லை. இன்னும் பஞ்சாயத்து உறுப்பினர்களைக்கூடத் 'தலைவா' என்றழைத்துத் தலைவணங்கத் தலைப்படுகிறோமே தவிர, நமக்காகப் பணியாற்றும் சேவகர்கள்தான் அவர்கள் என்று உணர மறுக்கிறோமே, அதனால்தான் 65 ஆண்டுகளாகியும் சுதந்திரம் எந்தவித பலனையும் தராமல் இருக்கிறது.

நாம் வசிக்கும் தெருவில் யாரும் பட்டினியுடன் தூங்காமல் பார்த்துக் கொண்டால், நமது வீட்டில் பொங்கல், தீபாவளி என்று கொண்டாடும்போது செலவோடு செலவாக ஏதாவது ஒரு ஓலைக் குடிசையில் வாழும் குடும்பத்தின் கொண்டாட்டச் செலவையும் ஏற்றுக் கொண்டால், நமது பகுதியில் இருக்கும் அரசு அலுவலகமோ, காவல் நிலையமோ, பள்ளிக்கூடமோ உடைந்த நாற்காலியும், ஆவணங்களையும் அடுக்கி வைக்க அலமாரி இல்லாமலும் இருப்பதை அந்தப் பகுதியில் வாழும் மக்களே மாற்ற முன்வந்தால், நமக்காக அரசு, நமக்காக நிர்வாகம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டால், காலனிய அடிமைத்தன மனோநிலையிலிருந்து மீளத் தலைப்பட்டால், அப்போதுதான் சுதந்திரம் செயல்படத் தொடங்கும்.

சுதந்திர தினத்தைத் கொண்டாடுவதன் மூலம் சுதந்திர அடையாளத்தை நாம் பாதுகாக்கிறோம். ஆனால், சுதந்திரத்தின் உணர்வைப் புரிந்து கொண்டு செயல்படும்போதுதான் சுதந்திரத்தின் பலனை நாம் அடைய முடியும்'' என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.



நன்றி: தினமணி செய்தி (16.08.2012)
.


No comments:

Post a Comment