அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Sunday 19 August 2012

சுதந்திர தின விழாவில் சேவை அமைப்புகளுக்குப் பாராட்டு


 கரடிவாவி ஸ்ரீ சுவாமி சச்சிதானந்தா நினைவு வள்ளலார் இயற்கை நலவாழ்வு அறக்கட்டளை நிர்வாகி  
திரு அன்பு கெங்காதரன்  அவர்களை கௌரவிக்கிறார், திருப்பூர் மாநகர துணை மேயர் திரு. எஸ். குணசேகரன்.

திருப்பூர், ஆக.  16: திருப்பூர் பொதுநல அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைப்புக் குழு  சார்பில் கொண்டாடிய சுதந்திர தினத் திருவிழாவில் சமூக சேவை அமைப்புகளை துணை மேயர் சு.குணசேகரன் கௌரவித்தார்.

 திருப்பூர் டவுன்ஹாலில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தினத் திருவிழாவில், திருப்பூரைச் சேர்ந்த பல்வேறு சமூக சேவை அமைப்புகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, துணை மேயர் சு.குணசேகரன் தலைமை வகித்தார். மேகலா நிறுவனங்களின் தலைவர் சி.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

 இதில், அன்பு இல்லம் (திருமுருகன்பூண்டி), வள்ளலார் இயற்கை நலவாழ்வு அறக்கட்டளை முதியோர் இல்லம் (கரடிவாவி), பாரதி குரு குலம் (அலகுமலை), மகாத்மா காந்தி கருணை இல்லம் (அமராவதிபாளையம்), குர்பானி அறக்கட்டளை, முயற்சி மக்கள் அமைப்பு (திருப்பூர்), காதுகேளாதோர் பள்ளி (முருகம்பாளையம்) ஆகிய சமூக சேவை அமைப்புகளை கௌரவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

சுதந்திர தின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்னிந்திய பின்னலாடை உரிமையாளர் சங்க செயலாளர் வி.பொன்னுசாமி பரிசுகளை வழங்கினார்.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.


நன்றி: தினமணி செய்தி (17.08.2012)
.



No comments:

Post a Comment