அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Thursday 23 August 2012

நமது விழா குறித்து தினமலரில் வெளியான செய்தி

 கருத்தரங்கில் பார்வையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் டாக்டர் வெ.ஜீவானந்தம்.

'இயற்கையைச் சார்ந்து வாழ்வதே சுகாதாரம்'

திருப்பூர், ஆக. 16: "மனிதனுக்கு முதுமை மட்டுமே தானாக வருகிறது. இயற்கை வளங்களை அழித்து, நமக்கு நாமே நோய்களை ஏற்படுத்திக்  கொள்கிறோம். உடல், மனம், சமூகம் அனைத்து வகை யிலும், இயற்கையை சார்ந்து வாழ்வதே உண்மையான சுகாதாரம்,''  என தமிழக பசுமை இயக்க தலைவர் ஜீவானந்தம் பேசினார்.

பல்வேறு அமைப்புகள் சார்பில் உருவாக்கப்பட்ட சுதந்திர தின விழா ஒருங்கிணைப்பு குழு சார்பில், டவுன்ஹாலில் நேற்று
நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அனைத்திந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் சமிதி செயல் தலைவர் முத்துசாமி கொடியேற்றினார். தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடந்தது. "டீமா' தலைவர் முத்துரத்தினம் தலைமை வகித்தார். சாய ஆலை சங்க செயலாளர் முருகசாமி முன்னிலை வகித்தார். 'தொழிலும் பொருளாதாரமும்' என்ற தலைப்பில் நிப்ட்டீ கல்லுரி தலைவர் ராஜா சண்முகம் பேசியதாவது:

சாயப்பிரச்னை, மின்தடை போன்ற பல்வேறு இடையூறு களுக்கு இடையே திருப்பூரில் பனியன் தொழில் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 2004 வரை கோட்டா முறையில் நடந்த உற்பத்தி, உலக மயமாக்கலால் சந்தைக்கு ஏற்ப பனியன் உற்பத்தி செய்ய வேண்டிய நிலைக்கு மாறியுள்ளது; உலக மயமாக்கலால் நன்மை இருந்தாலும், பல்வேறு தீமைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. உற்பத்தி செய்யும் பொருளை எந்த நாட்டில் வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்பதால், பனியன் தொழிலில் போட்டி அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளுடனான போட்டியை சமாளிக்க, உலக சந்தைக்கு நிகரான ஆடைகளை தயாரிக்க வேண்டும்;  தொழிலில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசித்து, தெளிவு பெற வேண்டும். 

ஒரு வருடத்தை மூன்றாக பிரித்து, ஒவ்வொரு பருவத்துக்கும் விதவிதமான ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ளது. பனியன் தொழிலை மேம்படுத்தி, தனிப்பட்ட ஆடை உற்பத்தியை துவங்குவதற்கான ஆராய்ச்சி மையமாக நிப்ட்டீ கல்லூரியை மாற்ற வேண்டும். இதில், திருப்பூரிலுள்ள அனைத்து தொழில் துறையினருக்கும் முக்கிய பங்கு உண்டு, என்றார்.

'இயற்கை வளங்களும் சுகாதாரமும்' என்ற தலைப்பில், தமிழக பசுமை இயக்க தலைவர் டாக்டர் ஜீவானந்தம் பேசியதாவது:

உடல், மனம், சமூகம் என அனைத்து வகையிலும் இயற்கையை சார்ந்து வாழ்வதே உண்மையான சுகாதாரம். அவ்வகையில் பார்த்தால், உலக நாடுகள் அனைத்துமே இயற்கையை சார்ந்து வாழ்வதை விரும்பாமல் உள்ளன. கியூபா மட்டுமே இயற்கை சார்ந்த விவசாயத்தை பின்பற்றி வருகிறது. திருப்பூரில் ஓடும் நொய்யல் நதிக்கு தொடர்ச்சி யாக 53 அணைகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, விவசாயத்துக்கு பயன்பட்டு வந்த நொய்யல் நதி, தற்போது தன்னிலை இழந்து கிடக்கிறது.

எல்லாவற்றுக்கும் ஆதாரமாக உள்ள இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் இருக்க வேண்டும். நமது நாட்டில் மொத்தமுள்ள ௨௫ சதவீத வளங்களில், ஆங்கிலேயர்கள் 200 ஆண்டு ஆட்சியில் எட்டு சதவீத வளங்களை மட்டுமே
அழித்தனர். தற்போது நமது நாட்டில் 12 சதவீத இயற்கை வளங்கள் மட்டுமே உள்ளன; 13 சதவீத காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மனிதனுக்கு முதுமை மட்டுமே தானாக வருகிறது; இயற்கை வளங்களை அழித்து, நமக்கு நாமே நோய்களை தேடிக்கொள்கிறோம்.

அதிக வருவாய் ஈட்டித் தருவதால், மது விற்பனையை அரசே ஏற்று நடத்துகிறது. நமது நாட்டிலிருந்து ஆண்டுக்கு 16 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்கள் ரகசியமாக விற்கப்படுகின்றன. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மது விற்பனையை நிறுத்திவிட்டு, நல்ல வருவாய் தரும் கிரானைட் விற்பனையை அரசு ஏற்று நடத்த வேண்டும், என்றார்.
.
நன்றி: தினமலர் (திருப்பூர்) 16.08.2012
.

No comments:

Post a Comment